
“ஏய் எங்க வந்து யாரப் பத்தி தப்பா பேசுற?” என சிக்கந்தர் கேட்க, கூட்டம் கூடிவிட்டது.
அப்போதுதான் ஒன்றை கவனித்தான் விஜய் ஆனந்த். அந்தக் கடைக்குள் ரஹீமின் ஆளுயர ப்ளக்ஸ் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லா கடைகளிலும் இப்படித்தான் இருந்தது. அப்போதுதான் புரிந்தது, இது ‘அப்துல் ரஹீமின் ஏரியா’ என்று.
“இவன் மண்டைய இந்த இரும்பு ராடால பொளக்காம விடமாட்டேன்” என்ற சிக்கந்தரை அனைவரும் தடுத்தனர்.
அந்த நேரத்தில் ரோந்து வந்த காவல் வாகனம் நின்றது.
“என்னாச்சு முபாரக், என்ன பிரச்சனை?” என்றார் காவலர்.
“சார்… இரும்பு திருடன் சார்” என்றவுடன், போலீஸ்காரர் இவனைப் பார்த்து “ஏம்பா பாத்தா டீசன்டா இருக்க…”
“சார் நான் திருடலை சார், நான்…”
“எதுவா இருந்தாலும் ஸ்டேசனுக்கு வந்து பேசு” என்று அவனை ஜீப்பில் ஏற்றினர். அப்பாவியின் சொல் அம்பலம் ஏறவில்லை.
காவல் நிலையத்தில் எச்சரித்து அனுப்பப்பட்டான். அவனது அலுவலகத்திற்குள் சென்றான்.
“விஜய் ஆனந்த், எங்க போனீங்க?” என்று மேனேஜர் கேட்க,
“சார் போலீஸ் புடுச்சுருச்சு சார்” என ஒப்பாரி வைத்தான்.
“என்னது போலீஸ் புடுச்சுருச்சா, சரி புக்ஸ் எல்லாம் எங்கே?”
“சார் புதுப்பேட்டையில புடுங்கீட்டாங்க சார்”
“என்ன வெளையாடுறியா?. புக்ஸோட மதிப்பு ஐயாயிரம் ரூவா. அத கொண்டுவந்து குடுத்துட்டு, நீ ஜாமீனுக்கு குடுத்த ஓட்டர் ஐடியையும், சர்ட்டிஃபிகேட்ஸையும் வாங்கீட்டு போ” என்றார் மேனேஜர்.
இருட்டிவிட்டது. அதே புதுப்பேட்டைக்குச் சென்றான். மணி 11 ஆகி விட்டது. ஆள் அரவமில்லை. இவனை அடித்த கடையின் ஷட்டரை, ஒரு பூட்டு காவல் காத்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு கல்லை எடுத்து இரண்டு, மூன்று முறை அடித்தான். பூட்டு சரணடைந்தது.
புத்தகப் பையை எடுக்க அந்த ஷட்டரைத் திறந்தான். உள்ளே ஒரு கூட்டமே வெறியோடு நின்று கொண்டிருந்தது. அப்போது தான் அவனுக்குப் புரிந்தது, அந்த இடத்தில் எப்போதுமே வீட்டின் முன்புறம்தான் கடை வைத்திருப்பார்கள். ஒரு ஷட்டர் மூலம் வீட்டையும் கடையையும் பிரித்து இன்னொரு ஷட்டரில் கடை வாசலை வைத்திருப்பார்கள். இவனைப் பிடித்துக் கொண்டனர்.
“ஏன்டா என்ன தைரியமிருந்தா திருட வருவ?”
“நான் திருடனெல்லாம் இல்லீங்க. காலைல புக்குபையைப் புடுங்கீட்டீங்க. அத வாங்கத்தான் வந்தேன்”
அவன் வார்த்தைகளைக் கேட்காமல் அனைவரும் அடிக்கத் தொடங்கினர்.
“நிறுத்துங்க” என்று ஒரு கம்பீரக் குரல் கேட்டது.
“வாப்பா, இவன் நம்ம ரஹீம பத்தி தப்பா பேசுனவன். பாருங்க கையிலகூட அந்த ப்ராடுப்பையன் பீட்டர் உருவத்த பச்ச குத்தி வெச்சுருக்கான்”
அவர்களுக்கெல்லாம் மூத்த தலைவராகத் தெரிந்தார் வாப்பா. இவன் கையை ஒருமுறை பார்த்துவிட்டு,
“விடுங்க. யார்ப்பா நீ என்ன வேணும், ஏன் பூட்ட ஒடச்ச?” என்று கேட்டார்.
“சார் நான் இன்னிக்குக் காலையில புக்கு வித்துகிட்டு வந்தேன். அத புடுங்கி வெச்சுகிட்டு போலீஸ்ல மாட்டி விட்டுட்டாங்க” என சிணுங்கினான்.
“முபாரக், இந்த தம்பியோட பை எங்க வச்சிருக்கீங்க”
“உள்ள இருக்கு வாப்பா”
“அப்சரா, உள்ள ஒரு பேக் இருக்கு. எடுத்துட்டு வாம்மா” என்று யாரையோ அழைத்தார் வாப்பா.
அப்போதுதான் இதுவரை காணாத ஒரு காட்சியைக் கண்டான்.
வீட்டுக்குள்ளிருந்து ஒரு வெண்ணிலா வெளிப்பட்டது. அது தன்னருகில் வரும் போதுதான், அது ஒரு பெண்ணென்றே அவனுக்குத் தெரிந்தது. அவனுடைய புத்தகப்பையை அவனுக்கு அவள் கொடுக்க, அவனோ பிரசாதம் பெறுவதுபோல் பயபக்தியோடு பெற்றுக் கொண்டான்.
“தம்பி இந்த புக்கெல்லாம் மொத்தம் சேத்து என்ன வெலை?” என்று கேட்டார் வாப்பா.
“பாய் ஒரு ஐயாயிரம் ரூவா வரும்”
“இந்தா ஐயாயிரம். இனிமே இந்த பக்கமெல்லாம் வரக் கூடாது” என ஐயாயிரம் ரூபாய் கொடுத்தார்.
“இந்தாங்க புக்ஸ்”
“வேணாம். நீ வேற யாருக்காவது வித்துக்கோ” என்று கூறிவிட்டு “கொஞ்சம் வழி விட்டுடுங்க” என்று அவர்களை ஏவினார்.
அந்த வெண்ணிலாவின் ஒளியிலிருந்து நீங்க மனமில்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். வாப்பா சென்றவுடன்….
“ஏண்டா காலைல அவ்வளவு திமிரா பேசுற? உனக்கு நேரம் நல்லா இருக்கு. அதான் இப்பவும் தப்புச்ச. இந்த பக்கமே வரக் கூடாது” என்று கூறி அவனை வெளியே தள்ளி ஷட்டரை மூடினர். இவன் வெளியே புத்தகப் பையுடன் தூக்கி எறியப்பட்டான். வாப்பா தந்த பணம் சிதறி விழுந்தது. ஏதோ அலறல் சத்தம்! திரும்பிப் பார்த்தான். ஆம்புலன்சா? இல்லையில்லை, ஒரு போலீஸ் இரவு ரோந்து வாகனம்.


Leave a Reply