
வார்டன் சண்முகம் சில மாணவர்களோடு வந்திருந்தார்.
“டேய், உன்னக் காணோமுன்னு ஊரெல்லாம் சல்லடை போட்டு தேடிட்டு வந்தா இங்க உக்காந்துருக்கியா” என்று கோபமாகக் கேட்டார்.
“போகச் சொன்னா போயிருவியா, அவ்வளவு திமிரா?” என்றார்.
“சார், இத அழிக்கப் போறதில்ல. அவரும் என்னை மாதிரி பெத்தவங்களால நிராகரிக்கப்பட்டவர்தான். அப்படிப்பட்டவர் ஜெயிச்சது எனக்கு பெரிய ஊக்கமா இருக்கும்னு நான் நம்புறேன்” என்றான் விஜய் ஆனந்த்.
“இன்னிக்கு என்னாச்சு தெரியுமா? அவன அரஸ்ட் பண்ணி விசாரிச்சுட்டு இருக்காங்க. எப்புடியும் வெளிய வரவே முடியாதுங்கறாங்க. அவன்தான் உனக்கு ஊக்கமா?” என்று கேட்டார் சண்முகம்.
“நூல்களைப் படியுங்கள், நூலாசிரியரை அல்ல”ன்னு கவிஞர் கண்ணதாசன் சொன்னாருன்னு ஒருநாள் நீங்க தானே க்ளாஸ்ல சொன்னீங்க. அவர் நீங்க சொல்ற மாதிரியே தப்பு பண்ணுனவராவே இருக்கட்டும். அவர் எந்த புள்ளியில இருந்து வந்து, ஜெயிச்சாருன்னு மட்டும்தான் நான் மனசுல வச்சிருக்கேன்” என்ற இவனது வார்த்தைக்கு எதிர் விவாதம் செய்ய அவருக்கு மனம் வரவில்லை.
“நீ இவ்வளவு உறுதியா இருப்பன்னு நான் நெனக்கலடா. இப்போதைக்கு நம்ம ஐ.டி.ஐ ட்ரைவிங் ஸ்கூல்லையே நாளைக்கு நானே சேத்து விடுறேன். இப்ப வா” என்றார். தன் முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான்.
விஜய் ஆனந்த் பாலிடெக்னிக் முடித்து பின் ஆட்டோமொபைல் படித்து முடித்தான். அவனது ஆசை முழுவதும் F1 கார் பந்தய வீரனாக வேண்டுமென்பதுதான். கோவை கரிமோட்டார் ஸ்பீட்வே களத்தில் எடுபிடி வேலைக்குச் சேர்ந்தான். அங்கு அவனது ஆர்வத்தைப் பார்த்தவர்கள், சென்னைக்குச் சென்றால்தான் அவனுக்கு வாய்ப்பும் எதிர்காலமும் அமையும் என்று கூறினர். தற்போது அவன் சென்னைக்கு ரயிலில் சென்று கொண்டிருக்கிறான்.
பீட்டர் போதை மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. சர்வதேச கார் பந்தய சம்மேளனமான FIA பீட்டருக்கு கார் பந்தயத்தில் கலந்து கொள்ள 5 ஆண்டுகள் தடை விதித்தது. சிறப்பு நீதிமன்றம் பீட்டருக்கு 6 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. காலங்கள் உருண்டோடின…


Leave a Reply