“டேய் ஆனந்த், நியூ இயர் டைம்ல யாராச்சும் தூங்குவாங்களா? எந்திரிடா” நண்பனின் குரலுக்குச் செவிசாய்த்து கண்ணைக் கசக்கினான் விஜய் ஆனந்த்.
“டேய் ராகுல், நான் நியூ இயரெல்லாம் கொண்டாடுறது இல்ல. தமிழ்புத்தாண்டு மட்டும்தான்.”
“ரொம்பத்தான்டா. நீ இப்புடியே இரு. எனக்கொண்ணும் பிரச்சினை இல்ல. இன்னிக்கு ரஹீம் ரேஸ் இருக்கு. இண்டோர் ஸ்டேடியத்துல லைவ் டெலிகாஸ்ட் போடுறாங்க. எல்லாரும் போறாங்க. வாடா” என்று ராகுல் சொல்ல, தட்டிக் கழிக்கப்பார்த்தான் விஜய் ஆனந்த்.
“நான் அதெல்லாம் பாக்குறதில்லடா. என்ன விடு. நீ போயிட்டு வா” என்றான்.
“நானே லேட்ரல் என்ட்ரி. எனக்கு உன்னத் தவற இங்க யாரையும் தெரியாது. ஆனா உனக்குத் தெரியாதவங்கன்னு யாருமே இங்க இல்ல. இன்னிக்கு ஒருவாட்டி மட்டும் என்கூட வா” என்ற நண்பனின் வார்த்தையை மீற முடியாமல் எழுந்தான்.
அது கோவையில் உள்ள ஒரு பிரம்மாண்ட கல்விக்குழுமத்தின் பாலிடெக்னிக் மாணவர் விடுதி. விஜய் ஆனந்த் நினைவு தெரியும் முன்பிருந்து, இங்குதான் இருக்கிறான். பிறந்து ஐந்தே நாட்களான நிலையில் இவன் பெற்றோர், இந்தக் கல்வி நிறுவனத்தின் வாசலில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
அன்றிலிருந்து இன்று வரை இந்தக் கல்விக் குழுமம்தான் இவன் தாய்வீடு. சாலையின் இரு மருங்கிலும் பரந்து விரிந்திருக்கும் இந்த 360 ஏக்கர் ஆலமரத்தின் முக்கிய விழுது இவன். இவனது காலடிபடாத இடம் என்று ஒன்று இங்கு இல்லை.
அந்த நாள் டிசம்பர் 31-ம் தேதி. இரவு நேர வானில் வான வேடிக்கைகள் நட்சத்திரங்களாகச் சிதறிக்கொண்டிருந்தன. நடக்கும் தொலைவில்தான் உள்விளையாட்டரங்கம். கோவையின் பிரதான விளையாட்டரங்குகளில் இதுவும் ஒன்று. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கு நடந்த இந்தியா – பாகிஸ்தான் கைப்பந்தாட்டத்தைப் பற்றி இன்றும் சிலாகித்துப் பேசுவார்கள். கடந்த மாதம்கூட இங்குதான் இளையோருக்கான தேசிய மகளிர் குத்துச் சண்டைப்போட்டி நடந்தது.
இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம், இந்தக் கல்வி நிறுவனத்தைச் ‘சாமியார் மடம்’ என்றும் கிண்டலாகக் கூறுவர். ஏனென்றால் இங்கு பொதுவாக ஒரு பெண்ணுக்குக் கூட அனுமதியில்லை. எனவே மகளிர் குத்துச்சண்டை போட்டிக்கு மாணவர் கூட்டம் அலைமோதியது.
சரி விஷயத்திற்கு வருவோம். மாணவர்கள் இதன் எல்லாக் கல்லூரிகளிலிருந்தும் (B.E, Polytechnic, ITI, Arts, School) வரத் தொடங்கி விட்டனர். நம்மவர்களும் உள்ளே நுழைந்தனர். திரும்பிய இடமெல்லாம் தலைகளாக இருந்தது.
“நான் பொறந்ததுல இருந்து இங்கதான் இருக்கேன். ஃபுட்பால் வேல்டு-கப் மாதிரி முக்கியமான மேட்ச்செல்லாம் போடுவாங்க. எனக்குதான் பாக்க இண்ட்ரஸ்ட் இல்ல” என்றான் விஜய் ஆனந்த்.
ஒரு இடத்தில் அமர்ந்தனர். இவனைத் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருந்ததால் அனைவரிடமும் சென்று பேசினான். மெகா ப்ரொஜக்டர் போட்டு விட்டார்கள். கார் பந்தயத்தின் முன்னோட்டங்கள், களநிலவரம் பற்றிக் கூறத் தொடங்கின ஆங்கில சேனல்கள். இன்றுதான் முதன் முதலாக தமிழ் சேனல்கள் கமெண்டரி கொடுக்கத் தொடங்கின.
அப்துல் ரஹீம் என்ற வீரரைப் பற்றி கூறத் தொடங்கியதுமே இங்கே கரகோஷம் காதைப் பிளந்தது. நாதன் பீட்டர் என்ற மற்றொரு வீரரும் நம்மவர் என்றவுடன் ஒருசில கைதட்டல்கள் மட்டும் கேட்டன.
டி.வி. கமெண்டரியில் சொன்னவை…
“இன்னிக்கு நம்ம ஸ்போர்ட்ஸ் ஹிஸ்ட்ரியில முக்கியமான நாள். கார் ரேஸிங் ஒரு செலவு பிடிக்கிற ஸ்போர்ட். இங்க அதுக்கு நெறைய ரசிகர்கள் இருக்காங்க. மைக்கேல் ஷூமேக்கர் மாதிரி இன்டர்நேசனல் ட்ரைவர்கள் இங்க எல்லாராலயும் விரும்பப்படறாங்க.
நம்ம இண்டியன்ஸோட ஸ்டேண்டிங் கொஞ்சம் கம்மிதான். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக்-னு சிலர் வந்தாலும் கன்சிஸ்டென்ஸி இல்ல. ஆனா இப்ப நெலம மாறிடுச்சு. அப்துல் ரஹீம், நாதன் பீட்டர்-னு ரெண்டு ட்ரைவர்கள் ரேஸ்ல இருக்காங்க. முக்கியமான விஷயம், அவங்க ரெண்டு பேரும் டைட்டில் ஜெயிக்கிறதுக்கு சான்ஸ் பிரகாசமா இருக்கு” என்று சொல்லி முடித்தவுடன் தமிழ் சேனலுக்காக அவர்கள் இருவரும் முன்தினம் கொடுத்த சிறப்புப் பேட்டி ஒளிபரப்பப்பட்டது.
முதலில் பீட்டர் பேசினார்.
“இந்திய மக்கள் எல்லாருக்கும் வணக்கம். ப்ரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ்ல இருந்து உங்ககிட்ட பேசுறதுல ரொம்ப சந்தோஷம். இன்னிக்கு டைட்டில் ஜெயிக்கிறதுலதான் என் மனசு முழுக்க இருக்கு. ஜெயிப்பேன்னு நம்புறேன்” என்றார்.
“உங்க ப்யூச்சர் பிளான் என்ன?” என்ற நிருபரின் கேள்விக்கு பீட்டர் பின்வருமாறு கூறினார்.
“கொழந்தையில குப்பத்தொட்டியில கெடந்தவன் நான். என்னை எடுத்து வளர்த்து, படிப்பு குடுத்து, எனக்கு ரேஸ்ல ஆர்வம் இருக்குன்னு தெரிஞ்சதும், ஊக்கம் குடுத்து என்னை இந்த எடத்துக்குக் கொண்டு வந்தது திருச்சி செயின்ட் ஜோசப் சர்ச்-சும் அவங்களோட எஜிகேசனல் இன்ஸ்டிட்யூஸன்சும்தான். அவங்களுக்குச் சாகுற வரைக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். அவங்க இல்லைனா இப்ப நான் இல்ல.
என்னை மாதிரி பெத்தவங்களால நிராகரிக்கப்பட்டவங்களுக்கும், ஆதரவற்றவங்களுக்கும், முடிஞ்ச வரைக்கும் அவங்க லட்சியத்தை அடைய உதவனுங்கறதுதான் என் ஆசை. அதை நோக்கிதான் என் பயணம் இருக்கும்” என பீட்டர் சொல்லி முடிப்பதற்குள் இவன் கண்கள் குளமாகின.
முதன் முதலாகத் தன் நிலையிலிருந்து வந்து உயர்ந்த ஒரு மனிதரைப் பார்க்கிறான். அதுவும் அவர் தன்னைப் போன்றவர்களுக்கு உதவுவேன் என்றது அவரது உயர்ந்த குணத்தைப் பறைசாற்றியது.
தான் குழந்தையாய் விடப்பட்ட நுழைவு வாயிலை அடிக்கடி சென்று பார்ப்பான். அப்போதெல்லாம் அழுகை வரும். தான் என்ன பாவம் செய்ததால் இந்த முடிவைப் பெற்றோர் எடுத்தனர் என்று கதறுவான். ஆனால் தன்போன்றோரும் வெல்ல முடியும் என்பதற்கு தற்போது ஒரு உதாரணம் கிடைத்துள்ளது என்று மகிழ்ந்தான்.
அடுத்து ரஹீம்: “நான் பிறவியிலயே வசதியான குடும்பத்த சேந்தவன். என் பரம்பரையே கார் பந்தயம் சம்பந்தப்பட்டது. அதனால நான் ரேஸர் ஆகுறதுல எந்த ஆச்சர்யமும் இல்ல. ஆனால் வசதியில்லாதவங்க ஸ்பான்சர் கெடச்சு, இந்த நெலமைக்கு வர்றது ரொம்ப கஷ்டம். அவங்களுக்கு எந்த அவார்னசும் இருக்காது. அப்படி இருக்கறவங்கள ட்ரெயின் பண்ணனும். அவங்களுக்காக ஒரு ரேஸிங் ஸ்கூல் ஆரம்பிக்கனும். இதுதான் என் லட்சியம்” என்று சொல்லி முடித்ததும் இங்கு பயங்கர கரகோஷம்.
இவர் மீதும் ஒரு மதிப்பு. ஆனால் பீட்டர் இவன் மனதில் ஒரு ஆதர்ஷ நாயகனானார்.
“ஆமா, இங்க ஃபுல்லா ரஹீம்க்குதான் ரசிகர்களா? பீட்டர்க்கு யாருமே இல்லையா” என்று ஒரு நண்பனிடம் கேட்டான்.
“அதோ அந்த மூலையில இருக்காரே ஆர்ட்ஸ் காலேஜ் கவினண்ணன், அவர் மட்டும் தான் பீட்டர் ஃபேன். நடுவுல உக்காந்தா ஓட்டுவாங்கன்னுதான் ஒரு ஓரமா போய் உக்காந்துருக்கார்” என்றான் நண்பன்.
இப்போது மீண்டும் கமெண்டரி..
“ரெண்டு பேரோட பேட்டியையும் பாத்தோம். ரெண்டு பேரோடதுமே நல்ல லட்சியந்தான். பட் ரெண்டு பேரோட பேக்கிரவுண்டும் வேற வேற. ஸ்டைல் வேற. ரசிகர்களும் வேற. ரஹீம்க்கு இந்தியாவுல சவுத்துல ஃபேன்ஸ் அதிகம். பீட்டருக்கு நார்த் இந்தியாவுலயும், அஃப்கோர்ஸ் யூரோப்லையும் எக்கச்சக்க ஃபேன்ஸ்” என்றதும் கூட்டத்தில் ஒருவன் “பீட்டர் கிறிஸ்டீன்ங்கறதனால் தான் யூரோப்ல சப்போர்ட் பண்றாங்க” என்றான்.
கமெண்டரி…
“ரஹீம் ஒரு ஆக்ரோஷமான ட்ரைவர். ரேஸ் முழுக்க அதகளம் பண்ணீருவார். பீட்டர் ஒரு கூல் மேன். கன்சிஸ்டெண்டா போறது அவர் ஸ்டைல். ஒரு எக்ஸாம்பிள் காட்றோம் பாருங்க” என்று இரண்டு கிளிப்பிங் காட்சிகளைக் காட்டினர்.
“நல்லா பாருங்க. பார்முலா ஒன்ல ரீஃப்யூயலிங் டைம் அஞ்சுல இருந்து ஏழு செகன்ட்ஸ்தான். அதுல ட்ரைவருக்குப் பெருசா எந்த வேலையும் இருக்காது. அவங்க என்ன பன்றாங்கன்னு பாருங்க. ரஹீம் ‘சீக்கிரம் சீக்கிரம்’னு வண்டியைத் தட்றார். ஆனா பீட்டர் ஸ்டியரிங்ல லைட்டா வெரலால தாளம் போடுறார்.
இதே மாதிரி SIGNATURE STYLE SHOW UP-ம் வேற. இந்த கிளிப்பிங்-அ பாருங்க. ரஹீம் ஜெயிச்சதும் ஹெல்மெட்ட கழட்டி முட்டிபோட்டு நமாஸ் பண்ணீட்டுதான் செலிப்ரேட் பண்ணுவார். பீட்டர் ஹெல்மெட்ட கழட்டிட்டு கார செல்லமா ஒரு தட்டு தட்டீட்டு, கூட்டத்தை பாத்து கையசைப்பார்.
இதுதான் இவங்க ரெண்டு பேருக்குமான வித்தியாசம். ஒருத்தர் காட்டாறுன்னா, இன்னொருத்தர் அமைதியான நீரோடைன்னு சொல்லலாம்.”
தற்போது போட்டியில் பங்கேற்க எல்லா வீரர்களும் களத்திற்கு வந்தனர். அவர்களது தொழில்நுட்ப அணிகள் அவர்களைத் தயார்படுத்தின. சில நொடிகளில் ஆரம்பம்.
அழகான பெண்கள் வந்து இன்னும் எத்தனை மணித்துளிகளில் போட்டி ஆரம்பம் என்று நினைவுபடுத்தினர். முந்தைய தினம் நடந்த தகுதிச்சுற்றில் பீட்டர் முதலிடமும், ப்ரெஞ்சு வீரர் இரண்டாமிடமும், ரஹீம் மூன்றாமிடமும், ஜெர்மனி வீரர் நான்காவது இடமும் பிடித்தனர். எனவே பீட்டர் கார் முதல்காராக இருந்தது.
3…… 2…. 1…. GO.
இதோ போட்டி தொடங்கிவிட்டது. மின்னல் வேக கார்கள் சாலையில் பறந்தன. பாம்பைப் போன்று வளைந்து நெளிந்து காணப்பட்ட ஓடுதளத்தில் கார்கள் சாரைசாரையாக சென்றன.
இறுதிச்சுற்று….
பீட்டரின் கார் முன்னணியில் உள்ளது. ரஹீம் உள்ளிட்டோர் நூலிழை வித்யாசத்தில் பின் தொடர்கின்றனர். எல்லைக்கு மிக அருகில்…
திடீரென்று…
பீட்டரின் கார் கட்டுப்பாட்டை இழக்கிறது. சுற்றுகிறது, சுழல்கிறது. புகை கக்கிக்கொண்டு பக்கவாட்டுத் தடுப்பில் மோதித் தீப்பிடிக்கிறது. நல்ல வேளையாக பீட்டர் அதிலிருந்து எழுந்துவிட்டார். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கின்றனர். அதிர்ச்சிகரமாக பீட்டர் தகுதி நீக்கம் ஆகிவிட்டார். இந்த இடைவெளியில் ரஹீம் முதலிடமும், ரஷ்ய வீரர் இரண்டாமிடமும், இத்தாலி வீரர் மூன்றாமிடமும் பிடிக்கின்றனர்.
இங்கே மற்றவர்கள் ஆரவாரமிட, விஜய் ஆனந்த் சோகத்தில் ஆழ்ந்தான். ரஹீம் தனக்கே உரித்தான வெற்றித் தொழுகை செய்யத் தொடங்கினார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக மிகச் சோர்வாக இருந்தார். நமாஸ் செய்து விட்டு எழ முயன்றார்.
அப்போது…
ரஹீம் சுருண்டு விழுந்தார். இந்தப் பக்கம் தள்ளாடி நின்று கொண்டிருந்த பீட்டரும் மயங்கி விழுந்தார்.
அனைவருக்கும் அதிர்ச்சி. அதிலிருந்து மீள முடியாமல் “என்னாச்சு? என்னாச்சு?” என்றே கேட்டுக் கொண்டிருந்தனர். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.
இவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இங்கே நிகழ்ச்சி ஒளிபரப்பு இத்துடன் நிறுத்தப்பட்டது. அனைவரும் கலைந்தனர். விஜய் ஆனந்துக்கு படுத்தால் தூக்கமே வரவில்லை. இருவருக்கும் என்ன ஆகியிருக்கும் என்ற கேள்வி மட்டும் மனதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.



Leave a Reply