
ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரலில் இவனை சேர்த்து விட்டது. யாரையும் தெரியாத சென்னையில் நடந்து கொண்டிருந்தான்.
ஒரு பிச்சைக்காரன் குறுக்கிட்டு, “ஐயா யாருமில்லாத அனாதைங்க, தர்மம் பண்ணுங்க சாமி” என்றான். “ஐயோ பாவம், ஏம்ப்பா அம்மா அப்பால்லாம் இல்லையா” என்று கேட்டான்.
“எங்கம்மா ஒருத்தன்கூட ஓடிட்டா, அப்பன் ஒருத்திகூட…”
“அப்படின்னா உங்க தாத்தா பாட்டி?”
“யோவ், காசு இருந்தா போடு, இல்லன்னா மூடிகினு போ. நீ குடுக்கிற பிச்ச காசுக்கு கொலம் கோத்தரமெல்லாம் சொல்லனுமா?” என்ற பிச்சைக்காரனிடம் பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டு நகர்ந்தான்.
“மெட்ராஸ்ல இருக்கறவங்க எல்லாம் கோவக்காரங்கன்னு சண்முகம் சார் சொன்னது சரியாத்தான் இருக்கு” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
ஒரு செய்தித்தாளை வாங்கி தற்போதைக்கு ஏதாவது வேலை இருக்கிறதா என்று பார்த்தான். நேர்முகத் தேர்வுக்குச் சென்றான். மார்க்கெட்டிங் வேலைதான் கிடைத்தது. புத்தகம் விற்க வேண்டும். ‘ஒரு நாளுக்கான டார்கெட்டைச் சாதித்து விட்டால், பிறகு அன்றைய நாளுக்கான வேலை முடிந்தது’ என்று நம்பி வேலைக்குச் சேர்ந்தான். ஆனால் அவனை நம்பி யாரும் புத்தகம் வாங்கவில்லை. பதினைந்து நாட்கள் போனது.
அப்போதுதான் அவனின் மேனேஜர் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தார். அவனது கையிலுள்ள பீட்டரின் உருவ டாட்டூவைப் பார்த்துதான் யாரும் வாங்க முன்வரவில்லை என்றார். அவன் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியென்றால் தான் சொல்லும் இடத்திற்கு சென்று விற்றுக் காட்டுமாறு சவால் விட்டார். இவனும் சவாலை ஏற்றுக் கொண்டான்.
அந்த இடம் புதுப்பேட்டை… மெக்கானிக் கடைகளுக்குச் சென்னையிலேயே பெயர் போன இடம். திரும்பும் இடமெல்லாம் கார், பைக் உதிரி பாகங்கள் கடைகளில் தெரிந்தன. இவனுக்குப் பிடித்த கடைகள்! எங்கே பார்த்தாலும் கார்கள் உரித்து, பிரித்து வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கடைகளிலும் புத்தகத்தை விற்க முடிவு செய்தான். யாரும் வாங்க முன் வரவில்லை. வாங்காவிட்டாலும் இவனுக்குக் கவலையே இல்லை. அந்த இடத்திலேயே கார் எஞ்சின், கியர்களையே பார்த்துக் கொண்டே நிற்க வேண்டும் என்று தோன்றியது. ஒவ்வொரு கடையாகக் கண்காட்சியைப் பார்ப்பதுபோல பார்த்துக் கொண்டு, புத்தகத்தை அறிமுகம் செய்தான்.
ஒரு கடையில்…
“சார் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியில இருந்து வர்றேன். உங்களுக்கு ரொம்ப யூஸ் ஆகற ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி கொண்டு வந்திருக்கேன். சும்மா பாருங்க சார்” என்று கையில் கொடுத்து விட்டான்.
“டிக்ஸ்னரியா அப்டின்னா இன்னா?”
“சார் நீங்க எந்த வார்த்தைக்காவது அர்த்தம் தெரியலன்னா இதுல பாக்கலாம் சார்”
“அப்டின்னா நான் அர்த்தம் இல்லாம பேசறன்னு சொல்றியா?”
“சார் அப்புடி இல்ல சார். இங்கிலீஷ்ல உங்களுக்குத் தெரியாதத பாத்துக்கலாம்”
“அப்ப எனக்கு இங்கிலீசு தெரியலங்கறயா? ஐ ஏம் சிக்கந்தர். பாத்தியா எப்புடிப் பேசுறன்னு”
“சூப்பர் சார்” என்று வேண்டா வெறுப்பாக சொல்லிவிட்டு வேறு என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றிருந்தான்.
அப்போது அந்தக் கடைக்காரன் இவன் கையிலிருந்த பீட்டரின் உருவத்தைப் பார்த்தான்.
“டேய் முபாரக்கு, இவன் கையில ஏதோ வரஞ்சுகிறான். தம்பி இன்னாடா இது. யாரு இவன்?” என்று கேட்டான் சிக்கந்தர்.
“சார் இவரு பெரிய கார் ரேசர். பேரு பீட்டர். இவர மாதிரியே ஆகனும்னுதான் சென்னைக்கு வந்துருக்கேன்”
“அப்புறம் ஏன்டா, புக்கு வித்துனுகீற?”
“சார் இது இப்போதைக்கு வருமானத்துக்கு சார்”
“தம்பி, நாங்க காரோடவே குடும்பம் நடத்துறவங்க. நாங்க சொல்றோம் கேளு. கார் ரேசுன்னா கோடி கோடியா செலவு ஆகும். அதுபோக சின்ன வயசுல இருந்தே இதுல சேரனும். நீ என்னன்னா இப்பதான் மெட்ராசுக்கே வர்ற”
“சார் எனக்கு நம்பிக்கை இருக்கு சார். பொதுவா நாம ஒரு விசயத்த நெனச்சு ஒரு படி எடுத்து வெச்சா, சாமி ரெண்டு படி எடுத்து வெக்கும்பாங்க”
“யார்ரா இவன், புரியாமையே பேசுறான். டேய் இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது. உம்மூஞ்சிக்கு டேபுள் டென்னிசு, அப்புறம் செக்சு…”
“அண்ணே அது செஸ்”
“ஆ… அதுல கூட வெளையாடுவானே. யாரு… அவம்பேரு கூட…”
“விஸ்வநாதன் ஆனந்த்”
“ஆமா. அவன மாதிரி வர வேனும்னா சான்சு கீது. ஆமா, உம்பேரு என்ன?”
“விஜய் ஆனந்த்”
“பாத்தியா. நீ கூட ஆனந்துதான். இதுல இருந்தே தெர்லயா. இங்க பாரு விஜய், உனக்கு இதெல்லாம் சரிபட்டு வராது. ஒழுங்கா ஊரு பக்கம் போய் சேரு. அண்ணன் உன் நல்லதுக்கு தான் சொல்றேன். அதுவும் யாரு மாதிரி வரனுன்னு ஆசபடற பாரு. அவனே கம்பி எண்ணி…”
“இல்ல சார். அவரு அப்படிப் பண்ணியிருக்க மாட்டாரு. எனக்கு என்னமோ அந்த ரஹீம் மேலதான் சந்தேகமா இருக்கு” என அவன் சொல்லி முடிப்பதற்குள் கன்னத்தில் பளாரென்று அறை விழுந்தது.


Leave a Reply